Pages

புதன், 8 மார்ச், 2017

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் - 2017

 பாவோதல், இலக்கிய விமர்சனம் ஆகிய   போட்டிகளுக்கான  பாடல்களும் அவற்றுக்கான பொருள்களும்.


இவ்வருடம் (2017 ) இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் பங்கு பற்றும் மாணவர்களுக்கான சிறு உதவியாக பாவோதல் போட்டியாளர்களுக்கான பாடல்களையும் அவற்றுக்கான பொருளையும்இலக்கிய விமர்சனப்  போட்டியாளர்களுக்கான பாடலையும் ( கலித்தொகை) அதற்கான பொருளையும்,  சில்லையூர்  செல்வராசன் அவர்களின்சங்கெடுத்து ஊது தமிழ்ச்சாதி பெருஞ்சாதிஎன்ற கவிதையும் இப் பதிவில் இட்டுள்ளளேன்.

இணைக்கப்பட்டுள்ள பாடல், பிரிவு, வகுப்பு, இலக்கியம் என்பனவற்றின் விபரங்கள் வருமாறு:

1.   போட்டி இல:   23        முதலாம் பிரிவு                 தரங்கள்  - 4,5          நூல் : நாலடியார்
2.   போட்டி இல:   24        இரண்டாம்  பிரிவு          தரங்கள்  - 6,7          நூல் : ஏலாதி
3.  போட்டி இல :  25         மூன்றாம் பிரிவு         தரங்கள் 8,9            நூல் : பழமொழி நாநூறு
4.  போட்டி இல  :  26        நான்காம்  பிரிவு             தரங்கள்  10,11         நூல் : நளவெண்பா  பாடல்  - 01, 02
5.  போட்டி இல  :  26        நான்காம்  பிரிவு            தரங்கள்  10,11         நூல் :  கம்பராமாயணம் பாடல்  - 01, 02
6.  போட்டி இல  :  26         நான்காம்  பிரிவு           தரங்கள்  10,11         நூல் :  புறநானூறு
7.  போட்டி இல :  27         ஐந்தாம் பிரிவு              தரங்கள்    12,13        நூல் :      கலித்தொகை         போட்டி :   இலக்கிய விமர்சனம்
8. போட்டி இல :  27          ஐந்தாம் பிரிவு            தரங்கள்    12,13       நூல் :      சில்லையூர் செல்வராசன் கவிதைகள்      
                                                                                                                                                     போட்டி :   இலக்கிய விமர்சனம்




கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களின் பொருள்களின் கீழ் நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை மேலதிக் விளக்கம் தேவையான போது மாத்திரம் பயன்பட்டுத்திக் கொள்ளுங்கள். இவை ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக மாத்திரம். 
                                                        
                                                           ➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல:  23                 முதலாம் பிரிவு         தரங்கள்  - 4,5    நூல் : நாலடியார்

                          தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க
                          என்னை அவரொடு பட்டது?- புன்னை
                         விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
                          உறற்பால யார்க்கும் உறும்.



(பொ-ள்.) நம்மைப்  புறக்கணிப்பவரை அவரினும் முற்பட நாம் புறக்கணிக்க வேண்டும். அப்படியானவர்களுடன்   ஏன் தொடர்பு கொள்ள வேண்டும் ?  புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவனே  அவரவற்குரிய நன்மை தீமைகள் அரவரவ்களுக்கு வந்தே தீரும்.

(-து.) வருவன வந்தே தீருமாதலின் அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்ளுதலாகாது.
=========================================================== 
மேலதிக  விளக்கம்  :
((பொ-ள்.) தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க - தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்க; என்னை அவரொடு பட்டது - என்ன அவரோடு உண்டான தொடர்பு!, புன்னை விறல் பூகமழ் கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப - புன்னையின் வெற்றி வாய்ந்த மலர் மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! உறற்பால யார்க்கும் உறும் - வரற்குரிய நன்மை தீமைகள் யார்க்கும் வரும்.
(-து.) வருவன வந்தே தீருமாதலின் அதன் பொருட்டு உலகத்தில் யாரும் தம் கண்ணியத்தைக் குறைத்துக்கொள்ளுதலாகாது.
(வி-ம்.) இகழ்தல் ஈண்டுப் புறக்கணித்தற்பொருட்டு அவரின் முன் - அவர் இகழ்தற்குமுன்பே. எதுவும் தம்பழ வினைப்படியே வருதலின், என்னை அவரொடு பட்டது" என்றார். உறற்பால தீண்டா விடுதல் அரிது,1 என்றார் முன்னும் கடலின் புலால் நாற்றத்தைக் கடிதலின் புன்னைமலர்க்கு விறல் நுவலப்பட்டது. வீங்கு நீர் - கடல்; மிக்க நீர் என்னும் பொருட்டா வந்தது. பிறர்க்குத் தாழ்ந்தொழுகுவாரை நினைந்து யா£க்கும்' என்றாரென்க.

➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல:   24                இரண்டாம்  பிரிவு   தரங்கள்  - 6,7     நூல் : ஏலாதி

இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல்,-காணின், கலவியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும்.
 (சொ-ள்.)பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை யெதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டுகொண்டானெனில் கற்றறிந்தோராற் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவன்.
(-து.) இடர் தீர்த்தல் முதலிய ஒழுக்கங்களையுடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான்.

===========================================================
மேலதிக  விளக்கம்  :

(-ள்.) இடர் தீர்த்தல் - பிறருக்கு இடுக்கண் நீக்குதலும், எள்ளாமை - பிறரை இகழாமையும், கீழ் இனம் - கீழ் மக்களின் கூட்டத்தோடு, சேராமை - இணங்காமையும், யார்க்கும் - எல்லார்க்கும், படர் தீர்த்தல் - பசித்துன்பத்தை நீக்குதலும், பழிப்பின் நடை - சான்றோர் பழித்தற்குரிய ஒழுக்கத்தை, தீர்த்தல் - நீக்குதலும், கண்டவர் - தன்னோடு பழகுவார், காமுறும் சொல் - விரும்புதற்குரிய மொழிகளைப் பேசுதலும், காணின் - ஒருவன் மேற்கொள்வானானால், கலவியின்கண் - உலகப்பற்றினின்றும், விண்டவர் நூல் - நீங்கிய சான்றோரின் அறிவு நூல்கள் வேண்டாவிடும் - வேண்டாதனவாய் விடும்.

                                                      ➤➤➤➤➤➤➤➤➤➤


போட்டி இல 25       மூன்றாம் பிரிவு                    தரங்கள் 8,9   பழமொழி நாநூறு

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
திருவினும் திட்பம் பெறும்.

(
சொ-ள்.) பெரிய மலைநாட்டை உடையவனே!, செல்வம் உடையவர்களுக்கு  (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன, (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை, அத்தன்மையால், செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.

===========================================================
மேலதிக  விளக்கம்  :
(சொ-ள்.) பெருவரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, திரு உடையர் ஆயின் - செல்வம் உடையவர்களுக்கு ஆயின், அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திரிந்தும் வரும் - (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன, பிரிவின்று - (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை, அதனால் - அத்தன்மையால், திருவினும் திட்பம் பெறும் -செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.

(
-து.) அறிவுச்செல்வம் பொருட்செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையேதேடுதல் வேண்டும்.

(
வி-ம்.) 'திரிந்தும் வருமால்' எனவே அறிவுச்செல்வம் திரியாது என்பதும், அறிவுச் செல்வத்தை நாம் தேடுதல் வேண்டும் என்பதும் பெறப்படும். 'திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி
.
                    ➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல  :  25               மூன்றாம்  பிரிவு      தரங்கள்          8,9      நூல் : நளவெண்பா

 
அறம்பிழைத்தார் பொய்த்தார் அருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் - புறங்கடையில்
சென்றார் புகுநரகம் சேர்வாய்கொல் என்றழியா
நின்றாள் விதியை நினைந்து.

( - ள்.) (தமயந்தியானவள் கலியை நோக்கிச் சினங்கொண்டு) அறநெறி தவறினவரும், பொய்யுரை கூறுவோரும், இரக்கமற்ற கொடியரும், மானத்தின் மேன்மையைக் கெடுத்தவரும், கடவுட் கொள்கையை இகழ்ந்து பேசியவரும் (ஆகிய இவர்களுடைய), தலைவாசலில் (அவர் நட்புக்காகச்) சென்றவர்கள், போகின்ற நிரயத்துன்பத்தில் நீயும் போவாய் என்று கூறி, பின்பு மனம் வருந்தித் தம் விதியை எண்ணிக்கொண்டு நின்றாள்.
( - து.) தமயந்தி கலியை நோக்கிக்கலியே ! நீ அறம்பிழைத்தவர் முதலியவர் சேரும் தீநரகில் சேர்ந்து துன்புறுவாய்என்று கூறி, மனம் வருந்தித் தம் ஊழ்வலியை எண்ணிக்கொண்டு நின்றாள் என்பதாம்.

===========================================================
மேலதிக  விளக்கம்  :
( - ள்.) (தமயந்தியானவள் கலியை நோக்கிச் சினங்கொண்டு) அறம்பிழைத்தார் - அறநெறி தவறினவரும், பொய்த்தார் - பொய்யுரை கூறுவோரும், அருள்சிதைத்தார் - இரக்கமற்ற கொடியரும், மானத்திறம் பிழைத்தார் - மானத்தின் மேன்மையைக் கெடுத்தவரும், தெய்வம் இகழ்ந்தார்-கடவுட் கொள்கையை இகழ்ந்து பேசியவரும் (ஆகிய இவர்களுடைய), புறங்கடையில் சென்றார் - தலைவாசலில் (அவர் நட்புக்காகச்) சென்றவர்கள், புகுநரகம் சேர்வாய் என்று - போகின்ற நிரயத்துன்பத்தில் நீயும் போவாய் என்று கூறி, விதியை நினைந்து அழியா நின்றாள்-பின்பு மனம் வருந்தித் தம் விதியை எண்ணிக்கொண்டு நின்றாள்.

( - து.) தமயந்தி கலியை நோக்கிக்கலியே ! நீ அறம்பிழைத்தவர் முதலியவர் சேரும் தீநரகில் சேர்ந்து துன்புறுவாய்என்று கூறி, மனம் வருந்தித் தம் ஊழ்வலியை எண்ணிக்கொண்டு நின்றாள் என்பதாம்.

                                                           ➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல  :  26               நான்காம்  பிரிவு      தரங்கள்  10,11          நூல் : நளவெண்பா
பாடல்  - 01

நளன், தமயந்திக்குப் பூக்கொய்வாள் ஒருத்தியின் முகத்தில் வண்டுகள் படிதலைக்காட்டல்

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.

( - ள்.) பூக்கொய்பவளாகிய பெண் ஒருத்தியின், ஒளிவிடுகின்ற முகத்தினை, செந்தாமரை மலரெனக் கருதி, மொய்க்கின்ற வண்டுகளை, தன் சிவந்த கைகளினால் தடுத்து நின்றாள், அந்தத் தாமரைமலர் போன்ற கைகளையும் (அவை) காந்தள் மலரெனக் கருதி மொய்த்தவுடனே, (அச்சங்கொண்டு,) வியர்வை நீர் துளிக்க நின்றவளை, நளமன்னன் நீ பாரென்று தமயந்திக்குக் காட்டினான்.

===========================================================
மேலதிக  விளக்கம்  :
 ( - ள்.) மலர்கொய்வாள் மங்கை ஒருத்தி - பூக்கொய்பவளாகிய பெண் ஒருத்தியின், வாள்முகத்தை - ஒளிவிடுகின்ற முகத்தினை, பங்கயம் என்று எண்ணி - செந்தாமரை மலரெனக் கருதி, படிவண்டை - மொய்க்கின்ற வண்டுகளை, செம்கையால் காத்தாள் - தன் சிவந்த கைகளினால் தடுத்து நின்றாள், அக் கை மலரை காந்தள் எனப் பாய்தலும் - அந்தத் தாமரைமலர் போன்ற கைகளையும் (அவை) காந்தள் மலரெனக் கருதி மொய்த்தவுடனே, வேர்த்தாளை - (அச்சங்கொண்டு,) வியர்வை நீர் துளிக்க நின்றவளை, வேந்து காண் என்றான் - நளமன்னன் நீ பாரென்று தமயந்திக்குக் காட்டினான்.
( - து.)பெண்ணொருத்தி மலர் கொய்கின்றாள்; அவள் முகத்தை வண்டுகள் தாமரை மலரென்று கருதி மொய்க்க, அவைகளைத் தன் கையால் தடுக்கிறாள்; அக் கைகளையும் அவை காந்தட் பூக்கள் என்று எண்ணி மொய்ப்பதைப் பார்என்று, நளன் தமயந்திக்குக் காட்டினான் என்பதாம்.
(வி - ரை.) மலர் கொய்கின்ற பெண்ணோருத்தியின் முகத்தையும் கைகளையும் வண்டுகள் தாமரை மலரெனவும் காந்தள்மலரெனவும் கருதி மயங்குதலால் மயக்கவணி. படிவண்டு: வினைத்தொகை. அக் கைமலரையும் எனற்பாலது, ஈண்டுச் செய்யுள் இசைநோக்கி எச்ச உம்மை மறைந்து நின்றது. மலர்க்கை: கைமலர் என வந்தது சொன்னிலை மாறிய இலக்கணப் போலி. அச்சமுற்றார்க்கு உடல் நடுக்குறுதலும் அதனால் வேர்வரும்பலும் இயற்கையாதலின்வேர்த்தாளைஎன்றார்.

                                                         ➤➤➤➤➤➤➤➤➤➤
பாடல்  - 02
புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.

( - ள்.) செழித்த தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகள் போன்றவளே! (ஓர் மலரில்) தம் துணையாகச் சேர்ந்திருக்கின்ற வரிகளையுடைய (ஆண், பெண்) வண்டுகளைப் பார்த்து, வனத்தில் வாழ்கின்ற மயிலைப்போன்று, போகின்ற பெண்ணொருத்தி,  தன் காற்சிலம்பொலி கேட்காதவாறு அடக்கிக்கொண்டு பைய நடந்து சென்று, அந்த மலரைக் கொய்யாமல், அரிய தளிர்களைக் கொய்கின்றவளை அறிவாயாக.

===========================================================
மேலதிக  விளக்கம்  :
( - ள்.) செம்மலரில் தேனே - செழித்த தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகள் போன்றவளே! புல்லும் வரிவண்டைக் கண்டு-(ஓர் மலரில்) தம் துணையாகச் சேர்ந்திருக்கின்ற வரிகளையுடைய (ஆண், பெண்) வண்டுகளைப் பார்த்து, புனமயில்போல் - வனத்தில் வாழ்கின்ற மயிலைப்போன்று, செல்லும் மடந்தை - போகின்ற பெண்ணொருத்தி, சிலம்பு அவித்து மெல்லப் போய்தன் காற்சிலம்பொலி கேட்காதவாறு அடக்கிக்கொண்டு பைய நடந்து சென்று, அம் மலரைக் கொய்யாது - அந்த மலரைக் கொய்யாமல், அரும் தளிரைக் கொய்வாளைத் தெளி - அரிய தளிர்களைக் கொய்கின்றவளை அறிவாயாக.
( - து.)பூவினிற் கலவியில் திளைத்துக் களித்திருக்கும் வண்டை கண்டு மெல்லச் சென்று அப்பூவைக் கொய்யாமல் தளிர்களைக் கொய்கின்ற தையலாள் ஒருத்தியைப் பார்என்று நளன் தமயந்திக்கு காட்டினான் என்பதாம்.
வி - ரை.) காலிலணிந்துள்ள சிலம்புகல்லென்றொலித்தால் கூடிக் களித்திருக்கும் வண்டுகட்கு இடையூறாமெனக் கருதி மெல்ல நடந்தாள் என்பாராய்ச்சிலம்பவித்துஎன்ற சொல்லால் விளக்கினார். வண்டு காதறிவில்லாதது என்பது ஆன்றோர் கண்டறிந்த உண்மை. அஃது இதற்கு மாறாகாதோவனின்? ஒரு சில ஆசிரியர்கள் வண்டிற்குக் காதறிவுண்டென்றே கருதுகின்றனர்! இவர்க்கும் அஃது, உடன்பாடுபோலும்! தொல்காப்பியரும் நன்னூலாரும்.


                                                                     ➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல  :  26               நான்காம்  பிரிவு      தரங்கள்  10,11          நூல் :  கம்பராமாயணம்
பாடல்  - 01

தூ நிறச் சுடு சரம், தூணி தூங்கிட,
வான் உறப் பிறங்கிய வைரத் தோளொடும்,
யான் உறக் கடவதே இதுவும்? இந் நிலை
வேல் நிறுத்து உற்றது ஒத்துழியும், வீகிலேன்.

    பொருள் : தம்முனைகளில் ஊன் படிந்தவனவாய்ப்  பகைவர் மார்பைத் துளைக்கவல்ல அம்புகள்; (செயலற்று) அம்பறாத்தூணியில் தூங்கி்க் கிடக்க; வானளாவ உயர்ந்த விளங்கிய; உறுதியுள்ள புயங்களுடனே;  நான் இத்தகைய துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமோ? எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை; வேல் என் மார்பகத்துப் பாய்ந்தது போன்றிருக்கவும்; நான் இறவாமல்இருக்கின்றேனே!

===========================================================
மேலதிக  விளக்கம்  :
     தூ நிறச் சுடு சரம் - தம்முனைகளில் ஊன் படிந்தவனவாய்ப்  பகைவர்  மார்பைத் துளைக்கவல்ல அம்புகள்; தூணி தூங்கிட - (செயலற்று) அம்பறாத்தூணியில் தூங்கி்க் கிடக்க; வான் உறப்பிறங்கிய - வானளாவ உயர்ந்த விளங்கிய; வயிரத் தோளொடும் - உறுதியுள்ள புயங்களுடனே;  யான் இதுவும் உறக்கடவதே - நான் இத்தகைய துன்பத்தையும் அனுபவிக்க வேண்டுமோ?இந்நிலை - எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை; வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் - வேல் என் மார்பகத்துப் பாய்ந்தது போன்றிருக்கவும்; வீகிலேன் - நான்  இறவாமல்இருக்கின்றேனே!

     பகைவர் மார்பில் பட்டு ஊன் தோய்ந்திருத்தல் பற்றித் 'தூநிறச் சரம்' என்றும், பகைவர்ககளச் சுடவல்லது ஆதலின் 'சுடுசரம்' எனவும் சிறப்பித்தார். 'நின்கைச் சுடு சரம் அனைய சொல்லால்' (472) என்றதும் காண்க.  தூங்குதல் - தொங்குதல், செயலற்றுக் கிடத்தல் என இரு பொருள்பட அமைந்துள்ளது.
பகைவரை வெல்லவல்ல படைவலிமையும் தோள்வலிமையும் பெற்றிருந்தும் தீங்கு செய்தவனைத் தண்டிக்காது துன்பத்தை அனுபவிக்கும் நிலை தனக்கு வருதல் வேண்டுமா என இராமன் கலங்கினான்.  இந்நிலை தனக்கு வரலாகாது என்பானாய் இதுவும் உறக்கடவதே' என்றான்.  தன் தோளின் உயர்வும் வலிமையும் தோன்ற 'வானுறப் பிறங்கிய வயிரத் தோள்' என்றான்.  மார்பில் வேல் பட்டாற்போல் இவ்வளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்தலும் வேண்டுமோ, இறத்தலே ஏற்றதன்றோ என இராமன் வருந்தும் நிலையைக் காண்கிறோம்.  ஒத்துழி - ஒத்த உழி என்பதன் தொகுத்தல் - ஒத்துழியும் -
உம்மை இழிவு சிறப்பும்மை.
         

                                                                                ➤➤➤➤➤➤➤➤➤➤
பாடல்  - 02

'தெரி கணை மலரொடும்
     
திறந்த நெஞ்சோடும்,
அரிய வன் துயரொடும்,
     
யானும் வைகுவேன்;
எரியும் மின்மினி மணி
     
விளக்கின், இன் துணைக்
குரிஇனம், பெடையோடும்
     
துயில்வ, கூட்டினுள்.

   பொருள்:  குருவிக்கூட்டங்கள்; ஒளிவிடுகின்ற மின்மினிப்பூச்சிகளாகிய; அழகிய விளக்கின் ஒளியில்;  தன் இனிய துணையாகிய பெண் குருவிகளோடு; கூட்டினுள் (இன்பமாய்) உறங்குகின்றன; நானும்; மன்மதன் ஆராய்ந்து எய்த மலர்களாகிய அம்புகளால்; பிளவுற்ற நெஞ்சத்தோடும்; பொறுத்தற்கரிய கொடிய துன்பத்தோடும்; (சீதையைப் பிரிந்து) காட்டில் தங்கியிருக்கிறேன்.

===========================================================
மேலதிக  விளக்கம்  :

     குரிஇனம் - குருவிக்கூட்டங்கள்; எரியும் மின்மினிஒளிவிடுகின்ற மின்மினிப்பூச்சிகளாகிய; மணி விளக்கின் - அழகிய விளக்கின் ஒளியில்;  இன்துணைப் பெடையோடும் - தன் இனிய துணையாகிய பெண் குருவிக ளோடு; கூட்டினுள் துயில்வ - கூட்டினுள் (இன்பமாய்) உறங்குகின்றன; யானும் - நானும்; தெரிகணை மலரொடும்மன்மதன் ஆராய்ந்து எய்த மலர்களாகிய அம்புகளால்; திறந்த நெஞ்சொடும் -  பிளவுற்ற நெஞ்சத்தோடும்; அரிய வன் துயரொடும்பொறுத்தற்கரிய கொடிய துன்பத்தோடும்; வைகுவேன் - (சீதையைப் பிரிந்து) காட்டில் தங்கியிருக்கிறேன்.
     பறவையினத்தைச் சார்ந்த குருவிக்கு அமைந்த இன்ப வாழ்க்கைகூட, உயர்ந்த மானிடப்பிறவில் தோன்றிய தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என இராமன் வருந்திக் கூறியது இப்பாடல். 'கூட்டினுள்' என்று
கூறியதற்கேற்பக் 'காட்டில்' என்பதும், 'மின்மினி மணி விளக்கின்' என்பதற்கேற்ப 'இருளில்' என்பதும் கொள்ளவேண்டும்.  குருவிகள் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் தம் கூடுகளில் பெடையொடு துயிலத் தான் இருளில், வனத்தில துணையின்றித் துயிலாது உள்ளேனே எனப் பொருள் விரித்துக் கொள்ளல் வேண்டும்.
     மின்மினியைக் குருவிகள் (வெளிச்சத்திற்காகத்) தம் கூட்டில் வைத்தல் உண்டு என்பதைத் 'தகைசால் மணி மேட்டு இமைப்பன;'மின்மினி ஆம்' எனக் கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்' (58) என்ற அடிகளால் அறியலாம். தம் துணையைப் பிரிந்து வாழ்பவர், துணையொடு வாழும் பிற உயிர்களைக்  காண்கையில் பிரிவுத்துயர் மிக்கு மனம் தளர்வடைதல் இயல்பாகும். 'மயிலும் பெடையும் உடன் திரிய, மானும் கலையும் மருவிவர, பயிலும் பிடியும் கடகரியும் வருவ, திரிவ, பார்க்கின்றான்; குயிலும் கரும்பும், செழுந்தேனும்,
குழலும், யாழும், கொழும்பாகும், அயிலும் அமுதும், சுவை தீர்த்த மொழியைப் பிரிந்தான் அழியானோ? (3569) என்று முன்னரும் கவிச்சக்கரவர்த்தி குறிப்பது காண்க.  குரீஇனம் என வரவேண்டியது எதுகை நோக்கி, 'குரிஇனம்' என்று வந்தது.

                                                                       ➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல  :  26               நான்காம்  பிரிவு      தரங்கள்  10,11          நூல் : புறநானூறு


 
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

     உரை: மூவேந்தரும் முற்றியிருந்த  அற்றைத் திங்களின்; அவ் வெள்ளிய  நிலாவின்கண்; எம்முடைய தந்தையையும்  உடையோம்; எம்முடைய மலையையும்  பிறர் கொள்ளார்; இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின்கண்; வென்றறைந்த முரசினையுடைய அரசர்; எம்முடைய மலையையும் கொண்டார்; நாங்கள் எம்முடைய தந்தையைம் இழந்தேம்.

===========================================================
மேலதிக  விளக்கம்  :  
  திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. பாரிமகளிர் பாடியது.

     உரை: அற்றைத் திங்கள் - மூவேந்தரும் முற்றியிருந்த  அற்றைத் திங்களின்; அவ் வெண்ணிலவில் - அவ் வெள்ளிய நிலாவின்கண்; எந்தையும் உடையேம் - எம்முடைய தந்தையையு  முடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் - எம்முடைய மலையையும்  பிறர் கொள்ளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில் -  இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின்கண்; வென்று எறி  முரசின் வேந்தர்- வென்றறைந்த முரசினையுடைய அரசர்; எம்  குன்றும் கொண்டார் - எம்முடைய மலையையும் கொண்டார்; யாம்  எந்தையும் இலம் - யாம் எம்முடைய தந்தையையு மிழந்தேம் -று.

தந்தையையுங் குன்றையு மிழந்து தனிமைத் துயருழக்கு  மகளிர், இழவாமுன் இருந்த நிலையினையும் உடன் நினைந்து வருந்துமாறு  தோன்ற, “அற்றைத் திங்கள்.....கொளார்என்றார். “வென்றெறி முரசின்  வேந்தர்என்றது, நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை,  அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின்,  இகழ்ச்சிக் குறிப்பினை யுடையதாயிற்று.

                                                         ➤➤➤➤➤➤➤➤➤➤

போட்டி இல  :  27               ஐந்தாம்  பிரிவு      தரங்கள்  12,13          நூல் : கலித்தொகை   

                                        போட்டி : இலக்கிய விமர்சனம்

பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

பொருள்:
நறியன பலவுங்கூடும் நறிய சந்தனம் தங்கண் மெய்ப்படுப் பார்க்குப் பயன் கொடுப்பதல்லது, மலையிடத்தே பிறந்தனவாயினும் அச்சந்தனங்களால்  அம்மலைக்கு என்னபயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து  உம்முடைய மகளும் பயன்படும் பருவத்து  உமக்குப் பயன்படாள்.

தலைமை பொருந்திய வெள்ளிய முத்துக்கள் அணிவார்க்குப் பயன்படுவதல்லது, கடலிடத்தே பிறந்தனவாயினும் அம்முத்துக்களால் அக்கடலுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து உம்முடைய மகளும் பயன்படும் பருவத்து உமக்குப் பயன்படாள்.

எழுநரம்பாற் கூட்டிய இனிய ஓசைகள் பாடுவார்க்குப் பயன்கொடுத்தலல்லது யாழிடத்தே பிறந்தனவாயினும் அவ்வோசைகடாம் அந்த யாழுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங் காலத்து உம்முடைய மகளும் பயன்படும்  பருவத்து உமக்குப் பயன்படாள்; என்று தெரிந்து கொள்.
                                                                   ➤➤➤➤➤➤➤➤➤➤


போட்டி இல  :  27               ஐந்தாம்  பிரிவு                  தரங்கள்  12,13          
நூல் :  சில்லையூர்  செல்வராசன் கவிதைகள்       போட்டி : இலக்கிய விமர்சனம்

சங்கெடுத்து  ஊது  தமிழ்ச்சாதி  பெருஞ்சாதி
   ------     சில்லையூர்  செல்வராசன் கவிதைகள்    --------

சாதி குலமென்று சமராடும் பேர்வழிகள்
நீதியென்றொன்றிந்த நீணிலத்தில் உள்ளதெனத்
தாமறியார் போலும், அதன் தாற்பரியம் கற்றிருந்தால்
நாமறிவோம் அண்மையிலே நமதூர்க் கோயில்களிலும்
சிற்றூர்களிலும் இச் சீர்கெட்ட சாதிப்போர்
உற்றதொரு காரணத்தை?  உத்தமரே!  கேடுகெட்ட

சாதிக் கொடுமைக்கு – சமத்துவத்தைக் கொல்லுகின்ற
சாதிக் கொடுமைக்கு சாக்காடு எப்போது  ?

எங்களுர்த் தனபதியின் ஏக புதல்வனுக்கு
இங்கிலாந்தூரில் இவன் கறுப்பனென்பதனால்
சங்கை குறைவாகச் சங்கடங்கள்  நேர்ந்துவிடின்
அங்கம் பதறி மிக அலமந்து வெள்ளையனின்
பேதக்குணத்தைப் பிழையுரைக்கும் ஐயாக்கள்
பூதனையும் கந்தனையும் பொன்னியையும் வள்ளியையும்
திண்ணையிலே கால்வைக்க, திருக்கோயில் உள்ளில் வர,
ஒண்ணாத வாறவரை  ஒதுக்கியடக்கி வைத்துச்

சாதித் திமிரிற் சழக்குரைப்பார் ; எங்கள் தமிழ்ச்
சாதியோ ஆமாம் ; தனிச்சாதி ; பெருஞ்சாதி !

காளை ஒருவன் அதி காலையிலும் மாலையிலும்
நீளப் பனையளந்த நெற்றி வியர்வையுடன்
பாளை பிழிந்த பதநீர் கலந்து வரக்
காலைப் பிடித்துக் கடன் சொல்லிக் கள் இரந்து
வேளைக்கு வேளை விட்டு நிரப்பித்தன்
பேழை வயிற்றுள்ளே பிதற்றி வெறியாடும்
சாலைகளில் தன் சபைகள் சந்திகளில் அந்த இளங்
காளையினைக் கண்டாலோ காறி உழிந்தவன் கீழ்ச்

சாதியென்று சாதிக்கும் சாதியெங்கள் சாதி !
சங்கெடுத்து ஊது தமிழ்ச்சாதி பெருஞ்சாதி !

பேனும் பொடுகும் பிடித்த தலைமயிரை
ஊனும், உதட்டின் உமிழ்நீரும் ஊறி மிக
ஈன உருக்காட்டும் இழிவான தாடியினைத்
தானீக்கி வேளைக்குத் தக்கபடி சிங்காரம்
பூணுவிக்கவோ, சவரம் புரியும் கலைஞனிடம்
கூனிச் சிரத்தைக் குனித்தே அவன் கைகள்
போன திசை போக்கும்;  புறத்தோ அவனைக் கீழ்ச்

சாதியென்று சாதிக்கும் சாதியெங்கள் சாதி !
சங்கெடுத்து ஊது தமிழ்ச்சாதி பெருஞ்சாதி !

நாளும் பொழுதும் தன் நாற்றவுடல் உள்ளிருந்து
மீளும் அசுத்தத் தை மேவிஇரை கொள்கின்ற
பாழும் விலங்குகளைப் பசியாறும் தன்னுடலிற்
சூழும் அழுக்கிழிந்தால் தொடவும் கை கூசும், அதை
நாளும் அகற்றி நலிந்து புழக்கடையின்
கூளத்தை, குப்பையினைக் கூட்டிச் சுகமாக
வாழவழி செய்து வருவோன் இவர் மலத்தை
ஊழ்வினையாற் தொட்டதனால் ஊதாசீனஞ்செய்தவன் கீழ்ச்

சாதியென்று சாதிக்கும் சாதியெங்கள் சாதி !
சங்கெடுத்து ஊது தமிழ்ச்சாதி பெருஞ்சாதி !

இழிகுலங்கள் என்றேதான் இயம்பும் குலத்தவர்கள்
வழி நடந்த வீதிவழியே நடப்பதிலும்
தொழில்  செய்தே அன்னவர்கள் தொட்டுத் தமதுடலில்
வழியும் வியர்வையுடன் கலந்து தருவதனை
இழிவென் றொதுக்காமல் ஏற்றுண்டு வாழ்வதிலும்
வெளியில் அவர் வாங்கி விடுகின்ற காற்றினையே
பொழுதெல்லாம் சுவாசித்துப்  பூரிப்பதிலும், ஒரு
பழிகாணா தவரைத் தன் பந்தியிற் பார்த்தாலோ கீழ்ச்

சாதியென்று சாதிக்கும் சாதியெங்கள் சாதி !
சங்கெடுத்து ஊது தமிழ்ச்சாதி பெருஞ்சாதி!

ஆமாம் தனிச்சாதி!
பெருஞ் சாதி!

நன்றி:   சில்லையூர் செல்வராசன் கவிதைகள் 
                 சில்லையூர்  செல்வராசன்

  ➤➤➤➤➤➤➤➤➤➤

மேலதிக விளக்கம் தேவைப்படுவோர் இப் பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிற்குச் சென்று மேலதிக விடயங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

 நன்றி: தமிழ் இணைய கல்விக்கழக மின் நூலகம்